உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி பகுதியை 2 ஆண்டுகளாக கலக்கிய கொள்ளையன் கைது

Published On 2022-09-14 14:26 IST   |   Update On 2022-09-14 14:26:00 IST
  • பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.
  • பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள சென்னீர்குப்பம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளையன் ஒருவன் கைவரிசை காட்டி வந்தான். அவனை பிடிக்க ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆவடி துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கேமரா காட்சிகளை வைத்து இரவு பணியில் இருந்த ஏட்டு பிரபாகரன், காவலர் சீனிவாசன் ஆகியோர் கொள்ளையனை அடையாளம் கண்டனர். பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.

அவனிடமிருந்து 10 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. செஞ்சியைச் சேர்ந்த இவன் திருவேற்காடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்ததும் தற்போது பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது.

சிவச்சந்திரன், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து விட்டு ஆவடி பகுதியில் உள்ள பிரபல நகை வாங்கும் நிறுவனத்தில் அடமானம் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனிப்படை போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

Similar News