உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் தென்காசி வாலிபர் அடித்து படுகொலை- இளம்பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை

Update: 2022-12-01 10:29 GMT
  • சூர்யா மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
  • சமீபகாலமாக ஒரு இளம்பெண் சூர்யாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

கொடைக்கானல்:

தென்காசியை சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர் கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இசையில் ஆர்வம் கொண்ட இவர் அதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் அடிக்கடி தனது அறையை பூட்டிவிட்டு அதிகாலையிலேயே சென்றுவிடுவார். இரவு அல்லது மறுநாள்தான் மீண்டும் தனது அறைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை அவரது அறை பூட்டிக்கிடந்தது. அருகில் இருந்த ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சூர்யா மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சூர்யா மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். சமீபகாலமாக ஒரு இளம்பெண் சூர்யாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சூர்யா சென்று வந்துள்ளார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர சூர்யாவின் செல்போனில் அவருக்கு அடிக்கடி போன் செய்து பேசிய மேலும் 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூர்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர அவர் தங்கியிருந்த அறையில் உள்ள பொருட்களையும் போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் செல்போனில் வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அவரது அறைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொடைக்கானல் விடுதிக்கு அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News