- கடத்திச் செல்லப்பட்ட குருத்திகா எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.
- தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் இந்த வழக்கை விசாரணை நடத்துகிறார்.
தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வினித் (வயது 22). சாப்ட்வேர் என்ஜினீயர். அதே ஊரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் படேல் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார்.
வினித்துக்கும், நவீன் படேலின் மகள் குருத்திகா படேலுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்த காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று நவீன் படேல் குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்த விசாரணைக்காக கடந்த 25-ந்தேதி மணமக்கள், வினித்தின் தகப்பனார் மாரியப்பன், சகோதரர் விஷால் ஆகியோர் குற்றாலம் போலீசில் ஆஜராகி வீடு திரும்பியபோது பின்னால் காரில் வந்த நவீன் படேல், அவரது மனைவி தர்மிஸ்தா படேல், மற்றொரு விஷால், கிருத்தி படேல், ராசு, ராஜேஷ் படேல், மைத்திரிக் ஆகியோர் வினித் சென்ற காரை இடித்து வினித் குடும்பத்தினரை தாக்கி விட்டு குருத்திகாவை தாக்கி இழுத்து கொண்டு காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து வினித் குற்றாலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 147, 294பி, 324, 427, 366, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகிறார்கள்.கடத்திச் செல்லப்பட்ட குருத்திகா எங்கு உள்ளார்? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குருத்திகா உள்பட 8 பேரையும் தேடி வருகிறார்கள். அவர்களது செல்போன் சிக்னல்கள் கோவாவில் இருப்பதாக காட்டுவதால் அங்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது.
இதற்கிடையே வினித் தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறியதாகவும், பணியில் அஜாக்கிரதையாகவும் இருந்ததாக கூறி, குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார்.
இதனால் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் இந்த வழக்கை விசாரணை நடத்துகிறார்.