உள்ளூர் செய்திகள்

பல்லடம் செட்டிப்பாளையம் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்

Published On 2023-09-06 14:28 IST   |   Update On 2023-09-06 14:28:00 IST
  • பொதுமக்கள் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1830 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் மட்டுமின்றி கொலை, கொள்ளைக்கு காரணமாக இந்த கடை இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள்- போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த டாஸ்மாக் கடை இங்கு செயல்படாத எனவும், தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த கடையை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News