உள்ளூர் செய்திகள்

நண்பரால் தாக்கப்பட்ட வாலிபர் 1 மாதத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் மரணம்

Published On 2022-12-03 10:59 GMT   |   Update On 2022-12-03 10:59 GMT
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன்.
  • தகராறு மோதலாக மாறியதால் அருகில் பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியை எடுத்த குமரேசன், ஜெகனை கையில் தாக்கினான்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன் (வயது29), அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்கிற லோகேஷ் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் கள்ளச் சந்தையில் பார்த்திபன் என்பவர் மது பானம் விற்பனை செய்ததை வாங்கி குடித்துள்ளனர்.

அப்போது மது போதையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக சென்ற வாலிபரின் செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது குமரேசன் செல்போனை திரும்ப அந்த வாலிபரிடமே கொடுத்ததால் குமரேசன் மற்றும் ஜெகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறு மோதலாக மாறியதால் அருகில் பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியை எடுத்த குமரேசன், ஜெகனை கையில் தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் அருகில் இருந்த கடாயை எடுத்து குமரசேன் தலையில் பலமாக தாக்கியதில் அவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு குமரேசனை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் ஒரு மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த திருத்தணி போலீசார் அதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News