உள்ளூர் செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் கடந்த ஆண்டைவிட 2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைவு

Published On 2022-11-23 12:47 IST   |   Update On 2022-11-23 12:47:00 IST
  • 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
  • வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைத்து மழை வெளுத்து வாங்கியதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இதனால் இந்த 2 ஏரிகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வழு விழந்ததால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்தது.

இதைத்தொடர்ந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 7,907 மி.கன அடி (7.9 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரிகளில் 10 ஆயிரம் மி.கன. அடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே அடுத்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2500 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 192 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 435 மி.கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் வருகிறது. 3 கன அடி வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,484 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 68 சதவீதம் ஆகும்.

ஏரிக்கு 58 கன அடி தண்ணீர் மட்டும் வருகிறது. 139 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 1,988 மி. கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 340 கன அடி தண்ணீர் வருகிறது. 53 கன அடி வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கன. அடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Similar News