இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது- நல்லகண்ணு கட்சி கொடியேற்றினார்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா தொடக்கவுரையாற்றுகிறாா்.
- மாநாட்டின் இறுதி நிகழ்வாக பத்மினி காா்டன் மைதானத்தில் பொது க்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கிய மாநாடு வருகிற 9-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
மாநாட்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆனி ராஜா ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
முதல் நிகழ்ச்சியாக மன்னார்குடியில் இருந்து எடுத்துவரப்பட்ட செங்கொடி வரவேற்புடன் மாநாடு தொடங்கியது. கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தியாகச்சுடர்களை மூத்த தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக தியாகச்சுடரை மூத்த தலைவர் காளியப்பன் ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் கட்சியின் அரசியல் அறிக்கை, கட்சியின் அமைப்பு நிலை அறிக்கை, கடந்த 4½ஆண்டுகளாக கட்சி ஆற்றிய பணிகள் ஆகியவை குறித்த அறிக்கைகள் முன் வைக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடக்கிறது.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா தொடக்கவுரையாற்றுகிறாா். இதில் தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறாா்.
மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாநில செயலாளர் நடராஜன், உள்ளிட்டோா் பங்கேற்று பேசுகின்றனா்.
2-வது நாளான நாளை அறிக்கைகளின் மீதான விவாதமும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. மாநாட்டின் 3-வது நாளான 8-ந்தேதி (திங்கட்கிழமை) அறிக்கைகள் மீதான தொகுப்புரை, கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை, மாநிலக்குழு, கட்டுப்பாட்டு குழு தோ்வு, தீா்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மாநாட்டின் இறுதி நாளான 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி அளவில் திருப்பூா் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கும் செம்படைப் பேரணியானது காங்கயம் சாலையில் உள்ள பத்மினி காா்டனில் நிறைவடைகிறது.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக பத்மினி காா்டன் மைதானத்தில் பொது க்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகிக்கிறாா். பொதுச் செயலாளா் டி.ராஜா, மூத்தத்தலைவா்கள் நல்லகண்ணு, அமா்ஜீத் கெளா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிறப்புரையாற்றுகின்றனா்.
மாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்வு, அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு, நூல் விலை உயா்வு, விசைத்தறி, ஜவுளி தொழிலாளா்களின் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதுடன் பல்வேறு முக்கிய தீா்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.