உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

Published On 2022-10-02 07:15 GMT   |   Update On 2022-10-02 07:15 GMT
  • மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
  • அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம் பாளையத்தில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு 1997-ம் ஆண்டு கோவில் அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி செந்தம்பாளையம் வையாபுரி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் காந்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் பூஜை நடைபெற்று வருகிறது.

மேலும் கோவில் வளாகத்தில் விநாயகர் சரஸ்வதி, லட்சுமி, சத்தீஸ்வரர், துர்க்கை, முருகன், ஆஞ்ச நேயர், அய்யப்பன் மற்றும் காலபைரவர் சுவாமிகளுக்கு தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுவாமிகளுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

கவுந்தப்பாடி மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் கோவி லில் 154-வது காந்தி ஜெயந்தி விழாவையொட்டி 26-ம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

இதையடுத்து காலை 9 மணிக்கு மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய்க்கும் புனித நீர் மற்றும் நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்திக்கு கையில் தேசியக்கொடி கொடுத்து பொங்கல் படைத்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது.

விழாவில் பவானி, அந்தியூர், அத்தாணி, கோபி செட்டிபாளையம், காஞ்சி கோவில், பெருந்துறை, சித்தோடு, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேச பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியை, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

கவுந்தப்பாடி செந்தாம்பாளையம் காந்தி கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி ஆனந்தன் வந்தார். தொடர்ந்து அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தரிசனம் செய்தார்.

விழா ஏற்பாடுகளை நிர்வாகி தங்கராஜ், ஊர் கவுண்டர் ஆறுமுகம், ஊர்காரியக்காரர் பழனிச்சாமி, கோவில் அர்ச்சகர் கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News