உள்ளூர் செய்திகள்
காரை துரத்திய ஒற்றை யானை.

காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே காரை விரட்டிய ஒற்றை யானை

Published On 2022-07-27 11:40 IST   |   Update On 2022-07-27 11:40:00 IST
  • சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
  • காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தாளவாடியில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்புஆலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. தற்போது இரவில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களின் எண்ணி்ககை குறைந்தது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர். சோதனைச்சாவடி அருகே சாலையில் ஒற்றை யானை கரும்புதுண்டுகளை சாப்பிட்டபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.

கார் மெதுவாக அதனருகே சென்றபோது சாப்பிடும் போது இடையூறு செய்வதாக கருதிய யானை காரை துரத்தியது. அப்போது அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் கதறினர். டிரைவர் வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால் அனைவரும் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News