சேலம் புதிய பஸ் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி ரூ.62 லட்சத்துடன் சிக்கிய முதியவர்
- சேலம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
- திருச்சி பஸ் நிறுத்தும் இடத்தில் முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதையொட்டி சேலம், பள்ளப்பட்டி போலீசார் நேற்று புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சி பஸ் நிறுத்தும் இடத்தில் முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் ஹான்ஸ் அல்லது கஞ்சா பொட்டலம் இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் 62 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய் அதில் இருந்தது.
இதையடுத்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மெயின்ரோடு, குமணன்குட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது59) என்பது தெரியவந்தது.
இந்த பணம் எப்படி உங்களுக்கு கிடைத்தது என அவரிடம் போலீசார் கேட்டனர். நகைக் கடைகளில் பணம் முதலீடு செய்து அதில் வாங்கும் தங்க நகைகளை சிறிய நகை கடைகளுக்கு கொடுத்து விற்பனை செய்வதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் அதில் கிடைத்த பணம் தான் இது என அவர் தெரிவித்தார். மேலும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி திருச்சிக்கு செல்வதாக கூறினார்.
எனினும் அவரது பேச்சு நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தொழில் செய்வதற்கான ஆவணம், பணத்திற்கான ரசீது எதுவும் இல்லை. இதை அடுத்து போலீசார் சேலம் மாவட்ட வருமான வரி துறை அதிகாரிகள் ராஜாராம், முருகானந்தம் ஆகியோரிடம் ரூ.62 லட்சத்துடன் பாலகிருஷ்ணனை ஒப்படைத்தனர். வருமான வரி துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.