திருநங்கைகளுக்கான ரோட்டரி கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப்
- கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரோட்டரி கிளப்பில் 16 திருநங்கைகள் இணைந்துள்ளனர்.
- ரோட்டரி மாவட்டம் 3201-ல் உறுப்பினர்களாக உள்ள 160 சங்கங்களும், டிரான்ஸ்மாம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து செயல்படும்.
கோவை:
திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் திருநங்கைகளுக்கான ரோட்டரி கிளப் தொடங்கப்பட்டு உள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் என்ற பெயரில் இந்த சங்கம் தொடங்கப்பட்டது.
இதன் தொடக்கவிழா நேற்று கோவையில் நடந்தது. விழாவுக்கு ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்டம் இளைஞர் சேவைப்பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் கிளப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை தன்ஷிகாவுக்கு ரோட்டரிக்கான பிரத்யேக பதக்கத்தை அணிவித்து சுத்தியலுடன் கூடிய மணியை வழங்கினார்.
கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரோட்டரி கிளப்பில் 16 திருநங்கைகள் இணைந்துள்ளனர். ரோட்டரி மாவட்டம் 3201-ல் உறுப்பினர்களாக உள்ள 160 சங்கங்களும், டிரான்ஸ்மாம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து செயல்படும்.
பொது இடங்களில் திருநங்கைகளுக்கான கழிப்பறைகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு, வீடுகளில் இருப்போருக்கு சமுதாய பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகளும் விரிவுபடுத்தப்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் தலைவர் திருநங்கை தன்ஷிகா கூறியதாவது:-
நாட்டில் முதல் கிளப் ஒடிசாவில் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் இரண்டாவதாகவும், தென்னிந்திய அளவில் முதலாவதாகவும் ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளாக மாற்றத்தை உணர்பவர்கள் கல்வியை பாதியிலேயே விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விடுகின்றனர். அவர்களுக்கு படிக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.
படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகளுக்கு மீண்டும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருதல், படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் ஏற்பாடு செய்தல், சமுதாயத்தில் அவர்களை மேலே கொண்டு வருதல் ஆகியவை இந்த கிளப்பின் முக்கிய இலக்காகும்.
இவ்வாறு அவர் கூறினார்.