உள்ளூர் செய்திகள்

வனத்துறை சார்பில் யானை தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரண தொகை

Published On 2024-04-15 10:19 GMT   |   Update On 2024-04-15 10:19 GMT
  • தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கடந்த சில தினங்களாக கரடிகல், சூளகுண்டா பகுதியில், ஒற்றை யானை ஒன்று உணவு தண்ணீர் தேடி கிராம பகுதியில் சுற்றி வந்துள்ளது.

இதை கண்ட விவசாயிகள் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணப்பா (71), அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை, அருகில் உள்ள விவசாய நிலத்தில் நாராயணப்பா யானை மிதித்து இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர், தளி எஸ்.ஐ சந்துரு மற்றும் போலீசார் உடலை மீட்க சென்றனர்.

அப்போது கிராம மக்கள், அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராம பகுதியில் யானைகள் புகாதவாறு ரோப்வயர் பென்ஸ் அமைக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அகற்றி சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர், நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நாராயணப்பா குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து, வனத்துறை சார்பில், நாராயணப்பா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News