உள்ளூர் செய்திகள்

கோர்ட்டு-மத்திய அரசு உத்தரவு இல்லாமல் பதிவுகளை நீக்க முடியாது: சமூக வலைதளங்களின் வக்கீல்கள் ஐகோர்ட்டில் பதில்

Published On 2022-10-14 10:26 GMT   |   Update On 2022-10-14 10:26 GMT
  • சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் உள்ளது.
  • சமூக வலைதளங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

மதுரை:

நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவதூறாக பேசியதாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் 6 மாத தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்றியது சம்பந்தமாக இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றுவது குறித்து தெரிந்து கொள்ள நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் புகழேந்தி அமர்வு முன்பு இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது யூ-டியூப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது அவர்கள் கூறுகையில், தனிப்பட்ட ஒரு பதிவை நீக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் குறிப்பிட்ட பதிவை நீக்க கோரி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை தவிர்த்து நாங்களாக நீக்க முடியாது என தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் கூறுகையில், சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதை வரைமுறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் சமூக வலைதள வழக்கறிஞர்களிடம் வீடியோ பதிவு செய்பவர்கள், யார்? அதற்கு கருத்து பதிவிடுபவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க முடியுமா? நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சமூக வலைதள வழக்கறிஞர்கள் வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பாக என்ன விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

Similar News