கரும்பு தோட்டத்தில் ரேசன்கடை ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சி.
பண்ருட்டி அருகே ரேசன் கடை ஊழியர் கழுத்தை அறுத்து கொலை
- பண்ருட்டி துணை போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- திலிப்குமாரின் உடலில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேடு பெரிய காலனியை சேர்ந்தவர் திலிப்குமார். இவர் பண்ருட்டி அருகே வல்லம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.
நேற்று கிருஷ்ணஜெயந்தி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள தோப்புக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் இரவு நேரமாகியும் திலிப்குமார் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் திலிப்குமாரை இரவு முழுவதும் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இன்று காலை அந்த பகுதியில் உள்ள சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் திலிப்குமார் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
இதனை வயலுக்கு சென்ற காவலாளி தீர்த்தமலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் ஊருக்குள் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டனர். திலிப்குமாரின் மனைவி மற்றும் மகன்கள் அங்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.
தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது திலிப்குமாரின் உடலில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து திலிப்குமாரின் மனைவி கூறுகையில், தனது கணவர் கழுத்தில் தங்க செயின் அணிந்திருந்ததாக தெரிவித்தார். அந்த நகை மாயமாகி இருந்தது. எனவே மர்மநபர்கள் திலிப்குமாரை கொலை செய்து நகையை பறித்து சென்றார்களா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.