உள்ளூர் செய்திகள்

மலர் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பொங்களாயி அம்மன்.


ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நூதன திருவிழா- 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து

Published On 2022-08-01 05:17 GMT   |   Update On 2022-08-01 05:17 GMT
  • கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இக்கோவில் திருவிழாவின் போது பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நேர்த்தி கடனாக ஆடுகளை பலியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பிரசித்தி இந்தத் திருவிழா நேற்று இரவு நடந்து. இதையொட்டி பொங்களாயி அம்மன் சாமி மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்து. அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பெரிய பெரிய பாத்திரங்களில் கறி சமைத்தனர். பிறகு விடிய விடிய கறி விருந்து(சமபந்தி விருந்து) பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

விழாவில் சேலம், நாமக்கல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, ராசிபுரம், நாமகிரிபேட்டை, வடுகம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கறி விருந்து சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகருத்தாக்கள் எஸ்.சுப்பிரமணியம், டி.ஆனந்த், எம்.சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News