உள்ளூர் செய்திகள்

சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதல்- 2 வடமாநில பக்தர்கள் பலி

Published On 2024-01-13 11:27 IST   |   Update On 2024-01-13 11:33:00 IST
  • விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக ராமேசுவரத்தில் உள்ள 2 சுற்றுலா வேன்களில் அவர்கள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஒரு வேன் ரோட்டில் கவிழ்ந்தது. மற்றொரு வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த 2 வடமாநில பயணிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். அவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக ராமேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News