உள்ளூர் செய்திகள்

ராமஜெயம்

ராமஜெயம் கொலை வழக்கு- 13 பேருக்கு நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை

Published On 2023-01-16 04:22 GMT   |   Update On 2023-01-16 06:17 GMT
  • பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.
  • பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

திருச்சி:

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந்த போது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேர் இருந்தனர்.

இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார். உண்மையை கண்டறியும் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது.

இந்தநிலையில் 13 பேரிடமும் நாளை (17-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்போவதாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 13 பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.

பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதன் அடிப்படையில் விசாரணையில் அடுத்தகட்ட நகர்வு சிறப்பாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News