உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் சாரல் மழையால் கடும் குளிர்

Published On 2023-07-24 10:06 IST   |   Update On 2023-07-24 10:06:00 IST
  • குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
  • பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

ஏற்காடு:

சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனிடையே குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே பொதுமக்களால் வெளியே நடமாட முடிகிறது.

குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகின்றனர்.

தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்த குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News