உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு... கெங்கவல்லி, தம்மம்பட்டியில் கொட்டிய கனமழை

Published On 2024-08-30 10:37 IST   |   Update On 2024-08-30 10:37:00 IST
  • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
  • மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

குறிப்பாக கெங்கவல்லி, தம்மம்பட்டி, டேனீ ஸ்பேட்டை, எடப்பாடி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

ஏற்காட்டில் நேற்று மதியம் மற்றும் மாலையிலும் மழை பெய்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு செல்லும் சுற்றலா பயணிகள் இயற்கையின் அழகு மற்றும் குளிர்ச்சியான சீதோ ஷ்ணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்கள்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர்-8.2, ஏற்காடு 12, வாழப்பாடி 2, ஆனைமடுவு 20, ஆத்தூர் 7.2, கெங்கவல்லி 41, தம்மம்பட்டி 36, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 8, வீரகனூர் 4, சங்ககிரி 15.4, எடப்பாடி 23, மேட்டூர் 10.2, ஓமலூர் 8, டேனீஸ்பேட்டை 24 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 229 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News