உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்ககோரி ஆரணி பேரூராட்சியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-10-16 13:07 IST   |   Update On 2022-10-16 13:07:00 IST
  • பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
  • பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும், செயல் அலுவலராக கலாதரனும் உள்ளனர்.

பேரூராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்மேடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்பட வில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இந்தநிலையில் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஆரணி பேரூராட்சி அலுவலம் முன்பு குடிநீர் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் கூறும்போது, வள்ளுவர் மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்க வில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை என்றார்.

அப்போது பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி தலைவர் , செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார் போராட்த்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News