உள்ளூர் செய்திகள்

வழிப்பறி கொள்ளையரிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்- போலீஸ் விசாரணை

Published On 2023-05-16 10:02 IST   |   Update On 2023-05-16 10:02:00 IST
  • காரில் வந்த கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கவுசல்யாவின் சுடிதார் சிக்கி கொண்டது.
  • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ஹட்கோ காலனியை சேர்ந்த கவுசல்யா (வயது 38) என்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம கும்பல் நகைபறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி, அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் கவுசல்யாவிடம் காரில் வந்த கும்பல் நகை பறிப்பில் ஈடுபட்ட குலைநடுங்கச் செய்யும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. பீளமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு கவுசல்யா நடந்து வருகிறார். அப்போது அவரை ஒரு கார் பின்தொடர்ந்து வருகிறது. அதில் 3 பேர் இருப்பதாக தெரிகிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு கவுசல்யா வந்தபோது காரின் முன்சீட்டில் இருந்த மர்ம வாலிபர் நகைப்பறிப்பில் ஈடுபட்டு உள்ளான். அப்போது தங்கச்சங்கிலி உடன் சுடிதார் துப்பட்டாவும் சிக்கி கொண்டது. எனவே கவுசல்யா தரதரவென்று காருடன் இழுத்து செல்லப்பட்டார்.

அப்போது அவரது தலை பின்சக்கரத்துக்கு மிகவும் அருகே இருந்தது. கவுசல்யா, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளார். பட்டப்பகலில் சம்பவம் நடந்ததால், அங்கு பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே கொள்ளை கும்பல் பயந்துபோய் கவுசல்யாவை பிடியில் இருந்து விடுவித்து உள்ளது. இதனால் அவர் காரின் பின்சக்கரத்தில் சிக்கி கொள்ளாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்து உள்ளார்.

கவுசல்யா வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும்போது சேலை அணிந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று அவர் வழக்கத்துக்கு மாறாக சுடிதார் அணிந்து இருந்தார். காரில் வந்த கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கவுசல்யாவின் சுடிதார் சிக்கி கொண்டது. எனவே அவர் கிட்டத்தட்ட மரண போராட்டம் நடத்தி தங்கச்சங்கிலியை காப்பாற்றி கொண்டு உள்ளார்.

வழிப்பறி கும்பல் வந்த காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்து உள்ளது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் வழிப்பறி வாகனம் தப்பி சென்ற போக்குவரத்து சாலைகளில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

இதில் அந்த கார் சிங்காநல்லூர் நோக்கி வேகமாக சென்று தப்பியது தெரிய வந்து உள்ளது.கவுசல்யாவின் கணவர் ராஜ்குமார் கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கணவன்- மனைவி இருவரும் தினந்தோறும் ஹட்கோ காலனியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதனை வழிப்பறி கும்பல் பல நாட்களாக நோட்டம் பார்த்து வந்து உள்ளது.

இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று நடைபயிற்சிக்கு வரவில்லை. எனவே கவுசல்யா மட்டும் தனியாக புறப்பட்டு சென்று உள்ளார். அப்போதுதான் வழிப்பறி கும்பல் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை மோட்டார் சைக்கிளில் மட்டுமே வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர் இப்போது காரிலும் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News