உள்ளூர் செய்திகள்

4 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை? தம்பதியிடம் போலீசார் விசாரணை

Published On 2022-11-04 12:17 IST   |   Update On 2022-11-04 12:17:00 IST
  • மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடலில் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்தது.
  • ரத்தபோக்கு ஏற்பட்டது போன்ற தடயங்களும் இருந்தது. சிகிச்சையில் இருந்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

வடமதுரை:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவரது மனைவி கவுரி(25). இவர்கள் மகள் சிவானி(4) . கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அதேமில்லில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்குமார் மனைவி கீர்த்திகா (32) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

தங்களுக்கு குழந்தை இல்லாததால் சிவானியை தாங்கள் வளர்த்து கொள்கிறோம். சிறிதுநாள் கழித்து பள்ளியில் சேர்க்கும் சமயத்தில் உங்களுடன் வந்து இருக்கட்டும் என கீர்த்திகா தெரிவித்துள்ளார். பிரகாசும் தாங்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில் குழந்தையை பராமரிக்க கஷ்டமாக உள்ளது என்பதால் அவர்களிடம் கொடுத்துள்ளார். அவ்வப்போது குழந்தையிடம் செல்போனில் பேசி நலம் விசாரித்து வந்தார்.

இன்று காலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனடியாக பிரகாஷ் மற்றும் கவுரியை வருமாறும் கீர்த்திகா மற்றும் அவரது கணவர் கூறியுள்ளனர். இதைகேட்டதும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் வடமதுரை வந்தனர். அப்போது குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடலில் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்தது. மேலும் ரத்தபோக்கு ஏற்பட்டது போன்ற தடயங்களும் இருந்தது. சிகிச்சையில் இருந்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ராஜேஸ்குமார் மற்றும் கீர்த்திகாவிடம் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News