உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீப்பற்றி மரங்கள், மூலிகை செடிகள் நாசம்

Published On 2023-02-20 10:17 IST   |   Update On 2023-02-20 10:17:00 IST
  • வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஊரடி, ஊத்துக்காடு, சொர்க்கம் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, முயல், கடமான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.

மேலும் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு நேற்று திடீரென காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகின.

மேலும் சிறிய வகை வன உயிரினங்கள் அங்கிருந்து தப்பி ஓடின. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வனத்துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். தீ தடுப்பு கோடுகள், வனப்பகுதியை பசுமையாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News