சத்தியமங்கலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
- திடீர் சாலை மறியலால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற பணியாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
- போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சாஸ்திரி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்றாக திரண்டு வந்து சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையின் இருபுறம் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இந்த திடீர் சாலை மறியலால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற பணியாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இந்த நாள் வரை நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் உங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.