உள்ளூர் செய்திகள்

காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு- காதலி வீட்டில் பனியன் தொழிலாளி தற்கொலை

Published On 2023-05-30 12:31 IST   |   Update On 2023-05-30 12:31:00 IST
  • மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார்.
  • காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விநாயக். இவர் திருப்பூர் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள வெங்கடேசன் நகரில் குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். அவர் ஒடிசாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விநாயக் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநில இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இது ஒடிசாவில் உள்ள விநாயக்கின் மனைவிக்கு தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் வந்த விநாயக்கின் மனைவி, அந்த பெண்ணிடம் எனது கணவருடன் இனி பேசக்கூடாது என்று கண்டித்து சென்றுள்ளார். அது முதல் அந்த பெண் விநாயக்கிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

இதில் மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, அதே பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு பல முறை சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். இதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

நேற்று காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் காதலி வீட்டில் பனியன் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News