திருவள்ளூரில் ஆன்லைன் டெலிவரி வாகனத்தில் திருட்டு- வாலிபர் கைது
- திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது.
- லேப்டாப்பை போலீசார் மீட்டு சின்னாவை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்புச் செல்வன். இவர் திருவள்ளூரில் இயங்கி வரும் பிரபல தனியார் ஆன் லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினசரி மினி வேனில் பொருட்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நகர் முழுவதும் சென்று அதை டெலிவரி செய்து வருவது வழக்கம். கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் டெலிவரி நிறுவனத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று பிற்பகல் வரை டெலிவரி செய்தார்.
பின்னர், டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து மீண்டும் வாகனத்தை எடுத்து டெலிவரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் வாகனத்தில் பார்த்தபோது லேப்டாப் மாயமாகி இருந்தது. காலையில் டெலிவரி நிறுவனத்தில் இருந்து எடுக்கும் போது இருந்த லேப்டாப் மதியம் வீட்டிற்கு சென்றிருந்த போது வேனில் இருந்து மாயமானது தெரியவந்தது.
இது குறித்து அன்புச் செல்வன் திருவள்ளூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் அன்புச் செல்வன் வீடு மற்றும் அந்த வாகனம் சென்ற இடங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பைக்கின் முன்புறம் லேப்டாப்பை வைத்து எடுத்துச் சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர் திருவள்ளூர் தலக் காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சின்னா (30) என்பதும் அவர் ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.
பணியில் இருந்து நிறுத்தப்பட்டதால் இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் லேப்டாப்பை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்த லேப்டாப்பை போலீசார் மீட்டு சின்னாவை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.