உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும்- என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

Published On 2022-07-20 09:31 GMT   |   Update On 2022-07-20 09:31 GMT
  • அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
  • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடையின்றியும், கட்டண உயர்வின்றியும் இருந்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் இன்றைய தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெளியிட்டு வந்த அறிக்கையும், பொய் பிரச்சாரங்களையும் திரும்பி பார்க்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்த உடன் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விரைவு பஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறையாமை, தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசம், அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளும் தி.மு.க.வினரின் அடாவடித்தனம், திராவிட மாடல் என்ற போர்வையில் மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் இன்றைய அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

இந்த அதிரடியான மின் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News