உள்ளூர் செய்திகள்

திருமணமான 2 நாளில் தற்கொலை: புதுமாப்பிள்ளையின் பெற்றோர்-உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகை

Published On 2023-09-24 13:35 IST   |   Update On 2023-09-24 13:35:00 IST
  • சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

செங்கல்பட்டு:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது 2-வது மகன் சரவணன் (வயது29). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவைச் சேர்ந்த சுவேதா என்பவருக்கும் கடந்த 17-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் சரவணன் திருமணமான 2 நாளிலேயே கடந்த 19-ந்தேதி மனைவியின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனிலவுக்கு செல்ல சரவணன் திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடைளே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சரவணனும், சுவேதாவும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சரவணன் மாமனாரின் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்து உள்ளார்.

சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சரவணனின் தந்தை மஞ்சுநாதன் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

அதில் திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் திருமணத்தின் போது செய்த செலவு பட்டியலையும் வழங்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News