உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்த பச்சையப்பன்-பாப்பாத்தியை படத்தில் காணலாம்.

காவேரிபட்டணம் அருகே மகன் கண்முன்னே நடந்த விபத்து: வேன் மோதி தாய்-தந்தை மரணம்

Published On 2023-06-02 07:51 GMT   |   Update On 2023-06-02 07:51 GMT
  • மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவேரிபட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த மிட்டஅள்ளி பாரத கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு சசிகலா, சரண்யா, செவ்வந்தி ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் (26) என்ற மகனும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

கடைசியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று மாலை பச்சையப்பனும், பாப்பாத்தியும் அவர்களது பேரன் தட்சன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் மணிகண்டனும், அவரது தங்கை சரண்யாவும் சென்றனர்.

அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பச்சையப்பன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பச்சையப்பன், பாப்பாத்தி, தட்சன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே 3 பேரும் விபத்தில் காயமடைந்ததை கண்டு மணிகண்டனும், சரண்யாவும் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பனும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News