உள்ளூர் செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த போது எடுத்தபடம்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேர் விடுதலை

Published On 2022-12-14 08:01 GMT   |   Update On 2022-12-14 08:01 GMT
  • கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
  • எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

தூத்துக்குடி:

தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.

அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பை வாசித்தார். இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்ட 4 பேரும் வந்திருந்தனர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில போதிய முகாந்திரம் இல்லாததால் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.

Tags:    

Similar News