உள்ளூர் செய்திகள்

பாதியில் படிப்பை நிறுத்திய 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம்- அமைச்சர் பேச்சு

Published On 2022-12-21 09:27 GMT   |   Update On 2022-12-21 09:27 GMT
  • அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம்.
  • பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு 400 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், பாக்கு, சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தின் மூலம் 2950 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு தேவையான புடவைகள் வழங்கும் பணியை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மேற்கொண்டுள்ளார். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வருகிறோம்.

அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம். அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பள்ளியில் பாதியிலே படிப்பை விட்ட இடைநிற்றல் மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரை கண்டறிந்து பள்ளியில் சேர்த்துள்ளோம். எந்த மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளாவார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

நம்ம ஊரு பள்ளி திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். பள்ளியில் படித்து பெரிய தொழில் அதிபராக உள்ளவர்கள், பெரிய இடத்தில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். நிதி வழக்குபவர்களுக்கு உடனுக்குடன் ரசீது கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளே ரூ.50 கோடி வசூலாகி உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News