மாமல்லபுரம் வீதிகளில் சுற்றி திரியும் மாடுகள்- வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி
- ஐந்துரதம் போன்ற முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் உலாவுகின்றது.
- மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்போரை அழைத்து எச்சரித்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சேரி, தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, பொதுப்பணித்துறை சாலை, தலசயன பெருமாள் கோயில், ஐந்துரதம் போன்ற முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் உலாவுகின்றது.
காலை வேளையில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மாடுகளால் சிரமம் அடைகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்து செல்லும் தாய்மார்கள் பயத்துடனே வாகனத்தை ஓட்டுகிறார்கள், சிலர் விபத்துக்களில் சிக்கியும் காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளும் அச்சம் அடைகிறார்கள்.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பலமுறை நவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்போரை அழைத்து எச்சரித்தது. இருப்பினும் தொடர்ந்து மாடுகள் சுற்றி திரியும் நிலை மாமல்லபுரத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் வீதியில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.