உள்ளூர் செய்திகள்
செவ்வாழை தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றை யானை

கடம்பூர் வனப்பகுதியையொட்டிய தோட்டத்தில் செவ்வாழை, கரும்பு பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

Published On 2022-06-29 04:37 GMT   |   Update On 2022-06-29 04:37 GMT
  • செவ்வாழைகள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளது.
  • 3 ஏக்கர் செவ்வாழை, கரும்பு தோட்டம் முற்றிலும் சேதம் அடைந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் கடம்பூர் ஏரி தோட்டம் என்ற பகுதி உள்ளது. வனப்பகுதியைெயாட்டிய இந்த பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இதில் செவ்வாழை மற்றும் கரும்பு பயிரிட்டுள்ளார். செவ்வாழைகள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை செவ்வாழை, கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்தது. அந்த யானை செவ்வாழை மற்றும் கரும்புகளை ருசித்தது. அப்போது சத்தம் கேட்டு செல்வம் தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு ஒற்றை யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் பட்டாசு வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட்ட முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் யானை தோட்டத்தை விட்டு வெளியேறாமல் விடிய, விடிய கரும்பு, செவ்வாழை தோட்டத்தை சேதப்படுத்தியது.

இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் யானை மீண்டும் தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் 3 ஏக்கர் செவ்வாழை, கரும்பு தோட்டம் முற்றிலும் சேதம் அடைந்தது.

Tags:    

Similar News