உள்ளூர் செய்திகள்

இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் சரியாக வராது- கே.எஸ்.அழகிரி

Published On 2023-06-29 04:48 GMT   |   Update On 2023-06-29 04:48 GMT
  • பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.
  • ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான்.

கும்பகோணம்:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மறைமுகமாக பேசிக்கொண்டிருந்த பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் சரியாக வராது. பிரச்சனைகளை தான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இந்த தேசத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறேன் என்று மோடி கூறுகிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அது தான். இதை கூறினால் நாட்டில் மக்கள் பல்வேறு விதமாக பிரிந்து செல்வார்கள், சண்டையிட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு தேவை.

மணிப்பூரில் மலைவாழ் மக்களுக்கும், நகரத்தில் வாழும் மக்களுக்கும் பிரச்சனையை தோற்றுவித்து, கடந்த ஆறு மாத காலமாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிகிறது. தற்போது வலிமையான ராணுவம் உள்ள நிலையில் மோடி நினைத்திருந்தால் 24 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும். ஆனால் அந்த கலவரத்தை உருவாக்கியவர்களே அவர்கள் தான்.

ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான். கூட்டணி என்பது பல்வேறு கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான். அவர்கள் இன்னும் கூட்டணியில் உறுதியாக வரவில்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News