உள்ளூர் செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2022-12-21 12:26 IST   |   Update On 2022-12-21 12:26:00 IST
  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
  • ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் அந்த மாநிலத்தில் உள்ள உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன் படுத்தவில்லை.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து கடந்த 9-ம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது.

இதற்கிடையே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் அந்த மாநிலத்தில் உள்ள உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன் படுத்தவில்லை.

மேலும் பூண்டி ஏரியில் இருந்து திருந்து விடப்படும் நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த வாரம் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1000 கனஅடி விதம் திறந்து விடப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஆந்திரா விவசாயிகள் மீண்டும் கிருஷ்ணா நீரை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி எரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலைநிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.17அடியாக பதிவானது. 2.877 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் வரத்து வினாடிக்கு 1,520 கன அடியாக இருந்தது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Similar News