உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Published On 2022-10-20 09:44 GMT   |   Update On 2022-10-20 09:44 GMT
  • ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
  • பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம்:

சேலம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் கந்துவட்டி தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்த காலதாமதம் ஆகும் போது, அவர்களை மிரட்டியும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசியும், அடித்து துன்புறுத்தியும் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஒருவரை, அப்பகுதியை சேர்ந்த ராவேந்திரன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று ராவேந்திரன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு டி.பெருமாபாளையம் அருகே ஆத்துப்பாலம் பகுதியில் வரும்போது, ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் ராவேந்திரனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த ராவேந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் அறிந்த ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராவேந்திரனை தாக்கிய கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவகம் அருகே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News