உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-08-16 17:45 IST   |   Update On 2023-08-16 17:45:00 IST
  • பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்குக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வழங்குமாறும் கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் தங்களுக்கு பணம் வந்த பிறகே பெட்ரோல் நிரப்ப முடியும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட் என்பவரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

மேலும் அரிவாளால் வெட்டுப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட்டை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வையாவூர் கிராமத்தை சேர்ந்த கோபி (24) என்பதும், அவருடன் வையாவூரை சேர்ந்த ஸ்ரீராம், சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா ஆகிய 3 பேரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் தப்பி ஓடிய வாலிபர்கள் ஸ்ரீராம் மற்றும் ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News