உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-09-25 13:53 IST   |   Update On 2022-09-25 13:53:00 IST
  • பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
  • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகரில் பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதே போல் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள நடைபாதையும் பேனர் வைப்பது, நடைபாைத கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பால் நிறைந்து இருந்தன.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

கடந்த சில வாரங்களாக காமாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற கைலாசநாதர் ஆலயம் செல்லும் புத்தேரி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

இந்த நிலையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

மேலும் நகரை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ளப்படும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News