உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிண அறையில் குளிர்சாதன பெட்டி பழுதால் உடல்கள் துர்நாற்றம்

Published On 2022-09-21 12:03 IST   |   Update On 2022-09-21 12:03:00 IST
  • காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது.
  • மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்படுவது வழக்கம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் உடல்கள், சென்னை , பெங்களூரு , திருப்பதி , பாண்டிச்சேரி , செங்கல்பட்டு மார்க்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 உடல்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த குளிர் சாதன பெட்டிகள் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக அதில் வைக்கப்பட்டு இருந்த உடல்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதையடுத்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது.

விபத்துகளாலும், தற்கொலைகளாலும் உறவினர்களை இழந்தவர்கள் உடல்களை பெற செங்கல்பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் அலையும் நிலை உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News