குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி சார்பதிவாளர் அலுவலகங்களில் முடக்கப்பட்ட ஆவணங்களை விடுவிக்கலாம்- கலெக்டர் தகவல்
- குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
- சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய முத்திரை சட்ட பிரிவுகள் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்கள் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கி உள்ள வசூல் பணியை முடுக்கி விடும் நோக்கத்தில், பதிவுத்துறை தலைவரது சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக் கிணங்க, பதிவு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 1.1.2023 முதல் 31.3.2023 வரையிலான காலத்திற்கு ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை, அவ்வாவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவ்வாறான கிரையதாரர்கள் தத்தம் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரைத் தீர்வையினை (அதாவது அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக் கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் தனிவட்டாட்சியர், காஞ்சிபுரம், தொடர்பு கொண்டு, இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.