உள்ளூர் செய்திகள்

இந்திய அளவில் கடந்த ஆண்டு ரூ.83,852 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி

Published On 2024-01-21 09:05 GMT   |   Update On 2024-01-21 09:05 GMT
  • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
  • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

திருப்பூர்:

பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News