உள்ளூர் செய்திகள்

மனைவிக்காக கப்பல் போல் வீடு கட்டி அசத்திய கணவர்

Published On 2023-06-10 05:33 GMT   |   Update On 2023-06-10 07:19 GMT
  • பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம்.
  • கடலூரில் நிஜமாகவே கப்பல் போல் தனது மனைவிக்காக பிரம்மாண்ட வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளார் சுபாஷ்.

கடலூர்:

கடலூரை சேர்ந்தவர் சுபாஷ் மரைன் என்ஜினீயர். இவர் கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதோடு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இவரது மனைவி சுபஸ்ரீ கப்பல் போல் வீடு கட்ட வேண்டும் என ஆசையாக கூறி வந்த நிலையில், தானும் கப்பலில் பணிபுரிவதால் கப்பல் போன்று வீடு கட்ட முடிவு செய்தார்.

இந்த நிலையில் கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில் ஒரு இடத்தினை வாங்கி அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.

கடந்த 2 ஆண்டாக வீடு கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து புதுமனை புகுவிழா நடைபெற்றது.

பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினை சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளை கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார்.

மேலும் நீச்சல் குளம், வீட்டில் உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும், நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் போது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகள் அமைத்து கட்டியுள்ளார்.

மேலும் இவரது குடும்பத்தின் அழைப்பான எஸ்.4 குடும்பம் உங்களை வரவேற்கிறது என அவர் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்தார்.

எஸ்.4 என்றால் என்ன? என்று கேட்கும் போது அது ஒரு குறியீடு என்றாலும் எங்கள் குடும்பத்தில் மனைவி, நான் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் முதல் எழுத்து எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் எஸ்.4 குடும்பம் என எங்களை நாங்கள் அழைத்துக் கொள்கிறோம் என சுபாஷ் தெரிவித்தார்.

சுபாஷ் மனைவி சுபஸ்ரீ கூறுகையில், எனக்கு திருமணமான உடன் என்னை கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியபோது, மலேசியா சென்று சாதாரண ஒரு கப்பலை காட்டினார். மேலும் எனது கணவர் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு குறைவு எனக் கூறிய நிலையில் கப்பல் போன்று உனக்கு வீடு கட்டி தருகிறேன் என்று கூறினார். ஆனால் அது சாத்தியப்படுமா? என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கப்பல் மாதிரியே வீடு கட்டி அதற்குள் எங்களை அழைத்து வந்து விட்டார் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம். ஆனால் கடலூரில் நிஜமாகவே கப்பல் போல் தனது மனைவிக்காக பிரம்மாண்ட வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளார் சுபாஷ்.

கடலூரில் இருந்து ஏராளமான மக்கள் அந்த வீட்டினை பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பார்த்து வியந்து வருகின்றனர்.

Tags:    

Similar News