ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது
- கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
- கோபி பகுதியில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் ரோடு குண்டு குழியுமாகவும், சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப்பகுதியில் 99 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனால் கோபி பகுதியில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதேபோல் சத்தியமங்கலம், நம்பியூர், கொடுமுடி, பவானிசாகர், குண்டேரி பள்ளம், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
சத்தியமங்கலம், தாளவாடி வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் இன்று காலை முதல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஈரோடு, அம்மாபேட்டை மொடக்குறிச்சி, கோபி, அந்தியூர் போன்ற பகுதியில் இன்று காலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வியாபாரத்துக்கு செல்லும் வியாபாரிகள், பணிக்கு செல்லும் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். மாணவர்கள் மழையில் நனையாதபடி குடை பிடித்தப்படி சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி-23, சத்தியமங்கலம்-50, பவானிசாகர் -31, கொடுமுடி-38, நம்பியூர்-40, எலந்தகுட்டை மேடு-51.20, அம்மாபேட்டை-13.20, கொடிவேரி-99, குண்டேரிபள்ளம்-16.20, வரட்டுப்பள்ளம்-8.80.