உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு

Published On 2023-11-01 08:08 GMT   |   Update On 2023-11-01 08:08 GMT
  • நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

மதுரை:

கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட அப்சல் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பலர் ரூ.19 லட்சம் வரை முதலீடு செய்திருந்தோம்.

ஆனால் அவர்கள் உறுதியளித்த படி நாங்கள் செலுத்திய முதலீட்டு தொகையை வட்டியுடன் திருப்பி தரவில்லை. இது குறித்து புகார் அளித்ததால் 2017-ம் ஆண்டில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

வழக்கின் அடிப்படையில் எங்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்தனர்.

அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில் வேல் இறந்துவிட்டார்.

ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிதி நிறுவனத்தினர் நிறைவேற்றாமல் 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் இந்த விவகாரத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி விலகிக் கொண்டார். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அனுப்பப்பட்டது.

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்சல் நிதிநிறுவனம், அதன் கிளை நிறுவனங்களால் சுமார் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மோசடி செய்தவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் மாதவன் ஆஜராகி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பது சட்டவிரோதம். உடனடியாக இந்த நிதி மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

முடிவில், இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News