உள்ளூர் செய்திகள்

மாஜிஸ்திரேட் உத்தரவிட்டும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி

Published On 2022-09-28 09:54 GMT   |   Update On 2022-09-28 09:54 GMT
  • மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
  • மனுதாரர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆஷிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் வக்கீலாக பணியாற்றுகிறேன். பல்வேறு சமூக சேவகைளிலும் ஈடுபட்டு வருகிறேன். என் மீது பொய்யான புகாரின்பேரில் கடந்த 2020-ம் ஆண்டில் தொண்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் என்னை சட்டவிரோதமாக கைது செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். இதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது எனது தலையில் காயம் ஏற்பட்டதை மாஜிஸ்திரேட்டு குறித்து வைத்து நீதிமன்ற காவல் தொடர்பான அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே சட்டவிரோத காவலில் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன்.

அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, 2 வாரத்தில் மனுதாரரின் மனுவை விசாரித்து குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

2 வாரம் முடிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வக்கீல் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர் விடுமுறையில் உள்ளார். அதனால்தான் மனுதாரர் புகார் நிலுவையில் உள்ளது என்றார்.

இதை ஏற்க இயலாது என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, போலீசாருக்கு அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News