காஞ்சிபுரத்தில் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்-கண்டக்டர்கள் 'திடீர்' போராட்டம்
- டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது. டிரைவர் சுரேஷ்பாபு பஸ்சை ஓட்டினார்.
பஸ் நிலையம் எதிரே எதிர் திசையில் ஆட்டோவை நிறுத்தி அதில் வந்த பயணிகளை ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக் என்பவர் இறக்கிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் சுரேஷ் பாபு, ஆட்டோ டிரைவர் தீபக்கிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தீபக் ஆட்டோவை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். மேலும் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து டிரைவர் சுரேஷ்பாபுவை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மற்றொரு அரசு பஸ்சின் டிரைவர் தனஞ்செயன், கண்டக்டர் கணேஷ் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை ஓட்டாமல் அங்கேயே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
தாக்குதலில் காயம் அடைந்த டிரைவர் சுரேஷ்பாபு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயம் அடைந்த தனஞ்செயன், கணேஷ் ஆகிய இருவரும் முதல் உதவி சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு சென்றனர்.
இதற்கிடையே டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் காஞ்சிபுரத்தில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்ப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருப்பதி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, செய்யாறு மார்க்கமாக செல்கின்ற அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.