உள்ளூர் செய்திகள்

களக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ- விளைநிலங்களுக்குள் பரவியது

Published On 2023-06-14 08:15 GMT   |   Update On 2023-06-14 08:15 GMT
  • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.
  • தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (வயது 48). விவசாயி.

இவர் களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளை நிலங்களை குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ திடீர் என மலையடிவாரத்தை தாண்டி, பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் காட்டுத் தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News