உள்ளூர் செய்திகள்

வனச்சரகத்தில் பராமரிக்கப்படும் புலியை வனத்தில் விடுவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசனை

Published On 2023-10-27 05:39 GMT   |   Update On 2023-10-27 05:39 GMT
  • புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது.
  • புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை முடிஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

வனத்துறையினர் விரைந்து சென்று அந்த புலிக்குட்டியை மீட்டு, சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அதை, வனத்துறையினர், மானாம்பள்ளி வனசரகத்திற்குட்பட்ட மந்திரி மட்டம் என்ற பகுதிக்கு கொண்டு சென்று அதனை பராமரித்து வந்தனர்.

மேலும் புலிக்குட்டிக்கு வேட்டையாடும் திறனை கொடுப்பதற்காக, அதற்கு பயிற்சி கொடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதற்காக மந்திரிமட்டம் என்ற இடத்தில் 10 ஆயிரம் சதுரடியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது. கூட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் துணை இயக்குனர் பார்கவதேசா, ஏ.சி.எப் செல்வம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் புலியின் நடவடிக்கைகள், அதன் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News