உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையங்களில் உணவு பண்டங்கள் விலை உயருகிறது- டீ, காபி, தண்ணீர் பாட்டிலில் மாற்றம் இல்லை

Published On 2023-01-25 09:17 GMT   |   Update On 2023-01-25 09:17 GMT
  • வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி:

நாடு முழுவதும் குறைவான கட்டணத்துடன் நிறைவான பயணத்தை அளிப்பதில் ரெயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினருக்கும் ரெயில் சேவை வசதியாக உள்ளது.

ரெயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையின் பேரில் இங்கு உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த உணவகங்களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த உணவுப் பொருட்களின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட இருக்கிறது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இவற்றின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி சட்னி சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13-ல் இருந்து ரூ.20 ஆகவும், மசால் தோசை ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், மெதுவடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17-ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

மேலும் வெஜிடபிள் சாண்ட்விச் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தக்காளி சாதம் ரூ.14-ல் இருந்து ரூ.20 ஆகவும், பொங்கல் ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், புளிசாதம் ரூ.21-ல் இருந்து ரூ.35 ஆகவும், தயிர் சாதம் ரூ.18-ல் இருந்து ரூ.30 ஆகவும், எலுமிச்சை சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தேங்காய் சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாம்பார் சாதம் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும் சைவ குருமாவுடன் இரண்டு பரோட்டாக்கள் அல்லது நான்கு சப்பாத்திகள் ரூ.29-ல் இருந்து ரூ.45 ஆகவும் விலை உயர்கிறது.

இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவு வகைகளின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் விலைப்பட்டியல் இதுவரை தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரவில்லை. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் வரும். வந்தவுடன் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றார்.

நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாடம் ரெயில் சேவையினை அதிகம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த உணவுப்பொருட்களின் விலை உயர்வு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News