திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பேக்கரி கடையில் தீ விபத்து
- கடையில் இருந்த இனிப்பு, குளிர் பானம், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது.
- திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் எம்.ஜி.எம். நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தில் திருவள்ளூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேக்கரி கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் கடையில் இருந்த இனிப்பு, குளிர் பானம், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் கடையில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம் எரிந்து சாம்பல் ஆனது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதிக அளவிலான இனிப்பு பொருட்களை வாங்கி கடையில் வைத்திருந்ததாகவும், ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும் தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.